வியாழன், 1 மே, 2014

Readers in Kavithai chittu [A May day verse!]

மே நாள், சிறப்புக் கவிதை!

By, Thiru S.Sengalvarayan -
A Reader in Kavithai Chittu!

     மாயையை ஓட்டுவோம்! 

வசந்தனோர் நடிகன் - கூட்டம்,
      மயங்கியே ரசித்த தாலே,
உசந்தனன் வாழ்வில் - எல்லா
உண்மையின் நகலைச் செய்தே!

பசப்புகள் அறியாப் பொன்னன்!
பக்தியோ  டுழுவான் மண்ணில்;
*தசப்பணம் பெறுவான் ஓர்நாள்
தளர்விலா உழைப்பை நல்கி!

உழுபவன் போலோர் வேடம்;
உதித்தது வசந்தனுக்கே!
பழுதிலா நடிப்புக் காட்ட,
பார்த்தறிந் திடவே சென்றான்!

பொழுதெலாம் பொன்னன் வேர்வை,
பொழிந்திட உழைக்கும் காட்சி,
தழுவியே வசந்தன்  நடித்தான்;
தாய்க்குலம் அழுத திங்கே!

அசலிலே உழைக்கும் பொன்னன்!
அரைப்பசி  யோடே வாழ்வான்;
வசந்தனோ நடிப்பால் மட்டும்
வாங்குவான் லட்ச மாக!

நிசந்தனை உணரா மக்கள்!
நிழலினைக் காணும் போக்குக்
கசந்திடும் நாளும் எனறோ,
கவலைகள் தீரும் அன்றே!

அயர்விலா(து) உழைக்கும் மக்கள்,
அடிமையாய் வாழ்கின் றார்கள்!
துயரிலா வாழ்வோ, வெற்றுச்
சூழ்ச்சியால் வாழ்ப வர்கே!

வியர்வையால் உலகை ஆக்கி,
விளைவினைப் பெருக்கும் நல்லோர்
உயர்வதும் என்றோ - மாயை
ஓடுவ தென்றோ மண்ணில்?

-- சு.செங்கல்வராயன்,  V 
      ஆய்வக உதவியாளர்,
      மண்தன்மை ஆராய்ச்சிக் 
      கோட்டம்,
      சென்னை-5.  
        (While Kavithai Chittu flew,                                                                      
        i.e., during 1990-1991)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக